skip to Main Content

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1952ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. வவுனியாவில் ஓர் இந்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களுக்கு முன்பே வவுனியாவில் வாழ்ந்த சைவப் பெரியார்களிடம் இருந்து வந்தது. இந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு உந்துசக்தியாக அன்றைய காலத்தில் இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் மிகவும் பிரபலயம் பெற்று விளங்கிய இந்து சமயப் பெரியார் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்களின் இலங்கை விஜயமும், அதனால் ஏற்பட்ட வவுனியா விஐயமும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

இப்பெரியார் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லவரும் போது அவரை வவுனியாவுக்கு அழைத்துப் பெரியதொரு வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும் அன்றே இங்கு ஒரு இந்து இளைஞர் சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் பல சைவ அன்பர்கள் விரும்பியதால், அக்காலத்தில் வவுனியா தெற்கு தமிழ்ப் பகுதிக் காரியாதிகாரியாகக் கடமையாற்றிய (டி.ஆர்.ஓ.) திரு. சதா. ஸ்ரீநிவாசன் அவர்கள் கவியோகி அவர்களை வவுனியாவுக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இதன் பயனாக 1952ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி (18.11.1952) அன்று அன்னார் வவுனியாவிற்கு விஜயம் செய்தார். அடுத்த நாள் (19.11.1952) அவருக்கு ஒரு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி அவர்கள் மன்னார் வீதிச்சந்தி (குருமன்காடு) யிலிருந்து ஊர்வலமாக மேளதாளவாத்தியங்களுடன் புகையிரத நிலைய வீதி, கடைவீதி வழியாக வவுனியா ஸ்ரீகந்தசுவாமி கோவிலுக்கு வந்தடைந்தார்.

அங்கு பூசை ஆராதனைகளை முடித்துக் கொண்டு அன்பர்களின் வேண்டுகோளுக் கிணங்க சுவாமி அவர்கள் தனது ஆசியுடன் அன்றைய தினமே “இந்து இளைஞர் சங்கத்தை” அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இக்கூட்டத்திற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களிலிருந்தும் சுமார் (120) நூற்று இருபது உறுப்பினர்கள் வரை சமூகமளித்து இருந்தனர். ரூபா ஒன்று உறுப்பினர் சந்தாவாகச் செலுத்தி இவர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்துகொண்டனர்.

கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்களால் நேரடியாக இச்சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டதால், இச்சங்கத்திற்குச் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் எனப் பெயரிடப்பட்டது.

அன்றைய ஆட்சி மன்றத்தினரின் பெயர்களை முழுமையாக இன்று தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், இதன் ஆரம்பகாலத் தலைவராக திரு.சதா. ஸ்ரீநிவாசன் அவர்களும், (காரியாதிகாரி) கௌரவ செயலாளராக திரு.சி. இரத்தினகேசரிலிங்கம் அவர்களும் இக்கூட்டத்தை கூட்டியவராக சாஸ்திரி கூழாங்குளம் செல்லையா பத்மநாதன் அவர்களும் இருந்தனர் என்பது அறியக்கிடக்கின்றது.

ஆரம்பகால நிருவாகம் இச்சங்கத்திற்கு ஒரு காணித்துண்டை வவுனியா நகரத்தில் ஒரு நல்ல இடத்தில் பெறுவதிலும், வேறு பல ஆரம்ப நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, தற்போது கட்டிடம் இருக்கும் காணியைப் பெற்றுக் கொண்டது. இதன்பின் பல வருடகாலம் இச்சங்கம் பொலிவிழந்து பெயரளவில் மட்டும் இருந்து வந்தது. இந்நிலையில் 1968ம் ஆண்டளவில் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் திரும்பவும் இலங்கைக்கு வருவதை முன்னிட்டு இச்சங்கம் புனரமைக்கப்பட்டது.

17.02.1968ம் ஆண்டு வவுனியா நகரசபை மண்டபத்தில் கூடிய இச் பொதுச் சபை மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டது. இக்கூட்டத்தில் திரும். திரு. சதா. ஸ்ரீநிவாசன் அவர்கள் தலைவராகவும், திரு. த. நல்லதம்பி. செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இதில் திரு. த. நல்லதம்பி  கிளிநொச்சியிலுள்ள “குருகுலம்” என்ற சைவ நிறுவனத்தில் ஏற்கனவே சேவையாற்றி அரசாங்க உத்தியோகம் காரணமாக வவுனியாவிற்கு மாற்றலாகி வந்தவர். இதன்பின் விடாத முயற்சியால் இச்சங்கம் முன்னேறலாயிற்று.

அதன் பயனாக ஏற்கனவே புகையிரத நிலைய வீதியிற் பெற்றுக் கொம் காணியில் ஒரு அலுவலகத்தையும், கலாசார மண்டபத்தையும், அமைக்கவேண்டுமென்ற ம ஆட்சிமன்றம் எடுத்துச் செயற்பட்டு வந்தது, கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர். இரண்டாவது முறையாகவும் இலங்கைக்கு வந்த போது அவரை வவுனியாவுக்கு இச்சங்கத்தில் அழைத்து கௌரவித்ததுடன் 20.06.1968 அன்று, கட்டவிருக்கும் புதிய கட்டிடத்திற்காக அத்திவாரக் கல்லையும் சுவாமி அவர்களினாலேயே நாட்டச்செய்தனர்.

அக்காலத்தில் வவுனியாவில் இருந்த பல சைவப் பெரியார்களும் அன்றைய பல அரசாங்க உத்தியோகத்தர்களும் அன்றைய வவுனியாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தா. சிவசிதம்பரம் அவர்களும் இச்சங்க வளர்ச்சியில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டனர். ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும் இருப்பவர்கள் இன்றும் இச்சங்கத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயற்படுவது சங்கத்திற்கு நன்மை பயக்கின்றது. பிற்சந்ததியினருக்கும் ஓர் உற்சாகமாக அமைந்துள்ளது.

இச்சங்கத்தின் கட்டிடத்தைக் கட்டிமுடிப்பதற்குப் பெரும் நிதி தேவையாக இருந்த போதிலும் வவுனியாவிலுள்ள பல வியாபாரிகளும், பல சைவ அன்பர்களும் மனங்கோணாது ஒரு புண்ணிய காரியத்தில் முதலிடுவதாக நினைத்து வாரி வழங்கியதாற் தான் இவ்வளவு பெரிய கட்டிடத்தை ஓரளவு கட்டி முடிக்கக் கூடியதாக இருந்தது. சைவ அன்பர்கள் மட்டுமல்ல வேறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் கூட நிதி உதவி புரிந்துள்ளனர்.

இன்னும் கட்டிடத்தைக் கட்டிமுடிப்பதற்கு நிதி தேவைப்பட்டபோதெல்லாம் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களிளெல்லாம் நேரடியாகவும், கலைநிகழ்ச்சிகள் மூலமும் நிதி சேகரிக்கப்பட்டது.தொடர்ந்தும் நிதி தேவையாக இருந்ததால் இச்சங்கத்தின் உப-தலைவர்களில் ஒருவரும், காந்தியத்தின் முக்கியஸ்தரும், “சாந்தி கிளினிக்’ என்ற தனியார் மருத்துவ மனையை நடாத்தி வந்தவருமாகிய டாக்டர் சோ. இராசசுந்தரம் அவர்கள் தனது சொந்த முயற்சியால் வெளிநாட்டு நிறுவனமாகிய “நொவிப்’ என்ற ஸ்தாபனத்திடமிருந்து ஒரு கணிசமான தொகையை நன்கொடையாகப் பெற்றுக் கொடுத்ததால் இச்சங்கத்தின் நடராஜர் மண்டபம் பூரணப்படுத்தப்பட்டது. இன்று வவுனியாவிலுள்ள சைவ மக்கள் மட்டுமல்ல, தமிழ்பேசும் மக்கள், எல்லோரும் பெருமைப்படும் அளவுக்கு உயர்ந்து சேவை செய்வதற்கு இக்கட்டடம் மூலகாரணமாகும்.

சேவைகள் ……..
இருபது அறைகளையும், ஒரு மேடையையும், பாரிய மண்டபத்தையும், மேலே சுற்றுவட்டமான பல்கனியையும், உள்ளடக்கிய நடராஜர் மண்டபத்தின் மேடையில் நடராசப்பெருமான் திருநடனம் புரியும் ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் பூசைகள் நடைபெறுகின்றன. இங்கே திருவாசகம் முற்றோதல், சமயச் சொற்பொழிவுகள், குருபூசைகள், மற்றும் நவராத்திரிவிழா, போன்ற சமய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

 

 

 

இம்மண்டபமும், அறைகளும் தற்போதைய பிரயாணக் கஷ்டம் நிறைந்த காலத்தில் வடக்கேயிருந்து தெற்கேயும், கிழக்கேயும், மலைநாட்டிற்கும், செல்லும் பிரயாணிகளில்நூற்றுக்கணக்கானவர்கள் நாளாந்தம் தங்கி நின்று ஓய்வெடுத்தும் செல்லப் பயன்படுகின்றது. ஓரளவிற்கு தண்ணீர் வசதி, மலசலகூட வசதி செய்து தொடுக்கப்பட்டுள்ளது. இச்சேவையை பலரும் காலத்தை அறிந்து செய்யும் சேவையாகப் பாராட்டுகின்றனர்மண்டபத்தில் தங்குவோரின் வசதிக்காக சுத்தானந்த சைவப்போசனசாலை அமைக்கப்பட்டு சிறந்த சைவ உணவு பரிமாறப்படுகின்றது. நிழற்பிரதி எடுக்கும் வசதியும் , உள்நாட்டு, வெளிநாட்டுத், தொலைத்தொடர்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

பாலர் பாடசாலை….
வவுனியா நகரத்தில் ஒரு நல்ல தரமான பாலர் பாடசாலை இல்லாத குறையைப் போக்கும் முகமாக இச்சங்கம் ஒரு பாலர் பாடசாலையை நடாத்திவருகின்றது. சுமார் முன்னூறு பிள்ளைகள் வரை கல்விபயின்று வருகிறார்கள் எட்டு ஆசிரியர்கள் சேவையாற்றுகிறார்கள். இப்பாடசாலை வவுனியாவில் ஒரு முதற்தரமான பாடசாலை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

பாடசாலைப் பிள்ளைகளின் மேலதிக வசதிக்காக ஒரு மண்டபம் எண்பத்து ஐந்து அடி நீளமும், முப்பத்து இரண்டு அடி அகலமும், கொண்டதாக மூன்று அடுக்கில் அமைப்பதற்கு தற்பொழுது வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கிழே மண்டபம் அமைக்கப்பட்டு சேக்கிழார் மண்டபம் என்ற பெயரில் இப்போது பயன்படுகின்றது. முதல் மாடியின் வேலைகள் பூர்த்தியாகி 12-06-1999ல் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைமைச் சுவாமிகள், சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கலாசார மண்டபம் என அழைக்கப்படும் இம்மண்டபம் மங்கலச் சடங்குகளுக்கும் மற்றும் பல்வேறு விழாக்களுக்கும் பயன்படுகின்றது. இம்மண்டபம் பெருமளவுக்கு சகல வசதிகளையும் கொண்ட திருமண மண்டபமாகப் பாராட்டப் படுகின்றது.

இச்சங்கத்தின் வளர்ச்சியில் இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டியிருக்கின்றது இச்சங்கத்தின் சாதாரண உறுப்பினர் தொடக்கம் ஆட்சிமன்ற தர்மகர்த்தா சபைவரை மிகுந்த பொறுப்புணர்வுடன் உழைத்து வருவதால் இச்சங்கம் மேன்மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

1990ம் ஆண்டில் வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட வன்செயலின்போது எமது சங்கம் பல இலட்சரூபா பெறுமதியான தளபாட உபகரணங்களை இழந்துவிட்டது. வன்செயல் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளின் பின்பே வெறும் கட்டடத்தை மட்டும் நாம் பொறுப்பேற்றோம்.

இன்று பாலர் பாடசாலை, அறநெறிப்பாடசாலைகள், சைவசமய ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள், திருமண மண்டப வசதிகள் எனப்பல சமூக சமயப் பணிகளை இச்சங்கம் ஆற்றிவருகின்றது. மாணவர்கள் மத்தியில் சமய, தமிழ், அறிவை ஏற்படுத்தப் போட்டிகள் வைத்து பரிசளித்தல், சிறந்த கலைஞர்களைப் பராட்டி பரிசளித்தல், முதலானவைகளும் எம்மால் நிகழ்த்தப்படுகின்றன. வவுனியாவில் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும், சமய மேம்பாட்டுக்கும், சமூக உயர்விற்கும் அரிய பணிகளை இச்சங்கம் ஆற்றுகின்றது.

யுத்தகாலத்தில் நகரத்திற்கு வந்தவர்கள் தங்கிச் செல்வதற்கான பாதுகாப்பான இடமாகச் சங்கம் விளங்கியது.
கலாசார மண்டபம் திருமணம் முதலான மங்கள நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி கருத்தரங்குகள், பயிலரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள்,மணி விழாக்கள்,பவள விழாக்கள் என பல்வேறு நிகழ்வுகளுக்கும் பயன்படுகிறது.
ஒலி பெருக்கி வசதியோடு பொருந்தியதும், மின் பிறப்பாக்கி கொண்டதும், நானூறுக்கும் மேற்பட்ட இருக்கைகளைக் கொண்டதும்,அளவான மேடையைக் கொண்டதுமான அழகான இம்மண்டபத்தில் நடந்தேறிய நிகழ்ச்சிகள் பல.

திருமணம்,பூப்பு நீராட்டு,ஆத்ம சாந்தி,பிறந்த நாள் முதலான நிகழ்வுகளுக்கு பெருமளவில் பயன்படுகிறது.
சுவாமி விவேகானந்தரின் திரு உருவச் சிலையை வட மேற்கில் கொண்டுள்ள இச்சங்கம் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது நினைவு நாளை சிறப்பாகக் கொண்டாடியது.

ஈழத்துச் சமய அறிஞர்களையும்இ தமிழகத்துச் சமய அறிஞர்களையும் அழைத்து நல்ல ஆன்மீகச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்துள்ளது.

யேசுபுரம்இ தாலிக்குளம் ஆகிய இரண்டு கிராமங்களில் அறநெறிப் பாடசாலைகள் நடத்தத் தேவையானவற்றை வழங்கி இந்துசமய வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றது.

இராம கிருஷ்ண மிசன், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பு முதலானவற்றின் குருமார்களுக்கும் ஏனைய இந்துசமயப் பெரியார்களுக்கும் இலவசமாகத் தங்குமிடம் வழங்கி அவர்கள் மூலம் இந்துசமய வளர்ச்சியில் பங்குகொண்டுள்ளது.

பாடசாலை மாணவர்களினது விளையாட்டுத் தேவைகளின்போதான வவுனியா வருகைகளின் போதும்,சுற்றுலாக்களின்போதும் சங்கம் தங்குமிட வசதியைச் செய்துகொடுத்துள்ளது.

மாகாண இலக்கிய விழாக்களின் போது வடக்குக் கிழக்குக் கலைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் தங்குமிடவசதியைக் கொடுத்தது. மாகாண தமிழ் மொழித்தின விழாக்களின்போதும் நிகழ்வுகளுக்காக வருகைதந்த நடுவர்களுக்கும் உத்தியோ கத்தர்களுக்கும் தங்குமிட வசதியைக் கொடுத்தது.
நூல் வெளியீடு
ஆறுமுக நாவலர் பெருமானின் சைவ வினாவிடை நூலை மறுபதிப்புச் செய்து மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியது. ‘கதிரமலை பேரின்பக் காதல்” என்ற சிறு பிரபந்தத்தையும் வெளியிட்டது.

கலாசார மண்டபத்திறப்பு விழாவின்போது சங்கம் பற்றிய தகவல்கள் அடங்கிய சுத்தானந்தம் என்ற ஒரு சிறு மலரினை வெளியிட்டது. பின் பொன் விழாவின்போது அதே பெயரில் பெரிய ஒரு மலரையும் வெளியிட்டது.
தமிழ் மொழி வளர்ச்சி கருதியும், இந்துசமய வளர்ச்சி கருதியும் எழுத்தாளர்கள் பலரது நூல்களைக் கொள்வனவு செய்து எழுத்தாளர்களுக்கு உதவியது.

நிதி உதவிகள்

பல்கலைக் கழகக் கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றது. அத்தோடு ஏழை நோயாளிகளுக்கும் மருத்துவ நிதி உதவிகளைச் செய்து வருகின்றது.
சுயம் சேவக சங்கம் முதலான இந்து அமைப்புக்களின் பயிற்சி முகாம்களுக்கும்,மாநாடுகளுக்குமான நிகழ்வுகளுக்கு நிதி உதவி செய்து வருகிறது.

வவுனியா கோவில்குளம் அருளகச் சிறுவர்கள் சிலரின் பாலர் கல்விக்கு உதவிவருகிறது.
வவுனியா பொது வைத்திய சாலை நோயாளர்களுக்கான சில வசதிகளுக்கு நிதி வழங்கியது.
சுனாமியின் போதும்இ இறுதிக் கட்ட யுத்தத்தின்போதும் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலவகையில் உதவியது.
இறுதி யுத்த காலத்தில் இடம் பெயர்க்கப்பட்டு வந்து முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்குப் பலவகைகளில் உதவியது.

இடம் பெயர்க்கப் பட்டவர்களில் ஒரு பகுதியினர் வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியில் தங்க வைக்கப் பட்டதால் அங்கு கல்வி கற்ற மாணவர்களுக்காக 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியின் தேவைக்கு நடராசர் மண்டபத்தை சங்கம் வழங்கியது.

ஆறு மாதங்களுக்கு மேல் சங்கத்தின் நடராசர் மண்டபம் வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி (நெளுக்குளம்)யின் பாவனையில் இருந்தது.

இச்சங்கம் மேலும் வளர்ச்சியடைந்து மேலும் சமய சமூகப்பணிகளை ஆற்ற இறையருளையும், உங்கள் ஆதரவையும் நாடி நிற்கின்றோம்.

Back To Top