skip to Main Content

File name : su-yappy-Final.pdf

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.”

அமைப்பு விதிகள் (யாப்பு)
(CONSTITUTION)-2019

06.04.2019 ம் திகதி நடந்த பொதுக்கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

Suddhananda Young Men’s Hiindu Association

Station Road,

Vavuniya.

 

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்,

புகையிரத நிலையவீதி,

வவுனியா.

யாப்பு விதிகள் – சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ,வவுனியா.

விடயம் உள்ளடக்கம் பக்கம்
1 பெயர், அலுவலகம், இலச்சினை மகுடவாசம் 3
2 பதிவு 3
3 விளக்கம் 3
4 தூரநோக்கு 3
5 பணிக்கூற்று 4
6 நோக்கங்கள் 5
7 உறுப்புரிமை 05 5
8 உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தல் 5
9 உறுப்புரிமையிலிருந்து விலகுதல் 6
10 உறுப்புரிமையிலிருந்து விலக்குதல் 6
11 வருடாந்த பொதுக்கூட்டம் 7
12 ஆட்சிமன்றம் 7
13 ஆட்சிமன்ற பதவிக்காலம் 9
14 தலைமை 9
15 தலைவர் 10
16 பொதுச் செயலாளர் 11
17 பொருளாளர் 12
18 துணைத் தலைவர்கள் 14
19 துணைச் செயலாளர் 14
20 துணைப் பொருளாளர் 14
21 கணக்காய்வாளர் 15
22 காப்பாளர்கள் 15
23 தர்மகர்த்தாசபை 15
24 சத்தியப்பிரமாணம் 16
25 ஆட்சிமன்றம் 16
26 நூல் நிலைய காப்பாளரும் அவரது கடமைகளும் 18
27 உடற்பயிற்சி பயிற்றுனரும் அவரது கடமைகளும் 18
28 விசேட பொதுக்கூட்டம் 19
29 நிறைவெண் 19
30 வாக்குரிமை 20
31 நிதி 20
32 கிளைச் சங்கங்கள் 21
33 யாப்பு விதிகள் 21
34 உடை 22
35 தொடர்பாடல் 22
36 அசையா சொத்து 22
37 அசையும் சொத்து 22

யாப்பு விதிகள் – சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் வவுனியா.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் – வவுனியா அமைப்பு விதிகள் (யாப்பு)

1.பெயரும் அலுவலகமும், இலச்சினையும், மகுட வாசகமும்.

இச் சங்கமானது “சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் – வவுனியா” என வழங்கப்படும். இதன் அலுவலகம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் உள்ள இதன் சொந்தக் கட்டிடத்தில் அமைக்கப் பெற்றிருக்கும். இதன் இலச்சினை நடராஜர் வடிவமாக இருக்கும். இதன் மகுட வாசகம் “மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.” என இருக்கும்.

 இது ஒரு இந்து சமய நிறுவனமாகும். இது இந்து சமய விழுமியங்கள்  அழிந்துவிடாது பாதுகாக்கும் பணியில் ஈடுபடும். தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகள் மற்றும் மனிதநேயப்பணிகளில்; ஈடுபட்டு சமூக நலனில் அக்கறைகாட்டும் ஒரு நிறுவனமாக செயல்படும்.

2.பதிவு

இச் சங்கமானது கொழும்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு இலக்கம் HA/4/V/5. பதிவுத் திகதி 07.12.1988.

3.விளக்கம்

கீழே சொல்லப்படுகின்ற அமைப்பு விதிகளுக்கமைய இந்நிறுவனம் இயங்கும். இவ்வமைப்பு விதிகளில் இனிமேல் சங்கம்” என வழங்கும் சொல் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்- வவுனியா”என்பதையே குறிக்கும்.

4.தூர நோக்கு (VISION)

 இந்து சமயம் சம்பந்தமான துரிதமான செயற்பாடுகளைச் செய்வதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி, எமது இந்துப் பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களை இறுக்கமாகப் பின்பற்றும் ஒரு சமூகமாக எமது சமூகத்தை முன்னேற்றுதல்.

5.பணிக்கூற்று (MISSION )

இந்துசமய தத்துவங்கள், கோட்பாடுகள் முதலானவற்றின் உண்மைகளை வெளிப்படுத்தும் இந்துசமய விழாக்களை நடாத்துதல்,இந்து சமய நம்பிக்கையுள்ள, சமூகமாக மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டுதலும் உதவுதலும்.

6.நோக்கங்கள்.

  1. இந்து சமயக் கோட்பாடுகளைக் கைவிடாது பின்பற்றுதல்.
  2. இந்து சமய அறிவு வளர்ச்சிக்குரிய கூட்டங்களை ஒழுங்கு செய்தல், இந்து சமய விழாக்களை கொண்டாடுதல்.
  3. இந்து சமய அடிப்படையில் கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்- களுக்கும், கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உதவியளித்தலும், ஊக்கப்படுத்தலும்.
  4. சங்க உறுப்பினர்களின் உடல் உள நலம் பேணும் பயிற்சிகளுக்கான ஒழுங்குகள் செய்தல்.
  5. இந்து சமயத்தினரின் உரிமைகளையும், விழுமியங்களையும் பாதுகாத்தல், அவற்றை இந்து சமயத்தினர் அனுபவிப்பதனை ஊக்கப்டுத்தல்.
  6. சமூக நலன் கருதி மனித நேயப் பொதுப் பணிகளில் ஈடுபடுதல்.
  7. தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுதல்.
  8. மாணவரிடையே சமய அறிவை வளர்த்தலுக்கான போட்டிகளை நடாத்தி அவர்களைச் சமய சிந்தனையாளர்களாக மாற்றுதல்.
  9. எல்லா வகையிலும் சிறந்ததான பாலர் பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளை நடாத்துதல். தற்போது ஒரு பாலர் பாடசாலை எமது வளாகத்தில் நடாத்தப் படுகின்றது.
    பதிவு இல: NP/PS/V/VS/VA-020
  10. நூல் நிலையம் அமைத்து இயக்குதல்.
  11. ஏனைய பிற இந்து அமைப்புக்களுடன் சுமுகமான தொடர்புகளைப் பேணிக்கொள்ளுதல்.
  12. ஆன்மீகத் தலைமைத்துவத்தை வழங்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
  13. இந்து சமய, தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த நூல்களை வெளியிடுதல், வெளியிடுவதற்கு எழுத்தாளர்களை ஊக்குவித்தல்
  14. பாடசாலைகளில் இந்து சமயத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்- களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குறுகியகால சைவசமய கற்கை நெறிகளை நடாத்துதல்.

 

8.உறுப்புரிமை.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 22 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய இந்து சமய ஆண்கள் அனைவரும் இச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்வதற்கு உரித்துடையோராவர். உறுப்பினர்கள் யாவரும் சங்கத்தின்யாப்பு விதிகளுக்கமைய நடந்துகொள்ள வேண்டும்.

  • உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தல்.
  • சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொண்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதனை சங்கத்தின் நடப்பாண்டு ஆட்சிமன்ற உறுப்பினர் ஒருவரின் சிபார்சுடன், சங்கத்தின் செயலாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
  • இந்த விண்ணப்பங்களைச் செயலாளர் பொதுக்கூட்டத்துக்கு முன்னரான ஆட்சிமன்றத்தின் மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார். பின் ஆட்சிமன்றத்தின் ஆலோசனையோடு அடுத்துவரும் பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிப்பார்.
  • பொதுக்கூட்டத்தில் புதிய விண்ணப்பதாரி நேர்முகமாக அறிமுகப்படுத்தப்பட்டு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தனது சந்தாப்பணத்தை செலுத்தி அங்கத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பொதுச் சபை விண்ணப்பதாரியை தகுந்த காரணங்களை முன்வைத்து நிராகரிக் முடியும்.
  •  சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய உறுப்பினர் ஒருவர் ஓராண்டின் பின்னரே சங்கத்தின் கூட்டங்களில் முன்மொழிதல், வழிமொழிதல் மற்றும் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதுடன் 3 வருடங்களை பூர்த்தி செய்த பின்னரே ஆட்சி மன்ற உறுப்பினராக வர முடியும்.

அ. உறுப்பினர்கள் இரண்டு வகைப்படுவர்.

1. ஆயுட்கால உறுப்பினர்.
ஒரே முறையில் ரூபா. 3000/= (மூவாயிரம்) செலுத்துவதன் மூலம் ஆயுட்கால உறுப்பினராக முடியும்.

(i) உறங்கு நிலை உறுப்பினர்

ஆயுட்கால உறுப்பினர் ஒருவர் தொடர்சியாக ஜந்து (5) பொதுக்கூட்டங்களுக்கு சமூகமளிக்காத சந்தர்ப்பத்தில், அவர் உறங்கு நிலை உறுப்பினராக கணிக்கப்படுவார்.பொதுக்கூட்டம் ஒன்றிற்கு நிறைவெண் கணிக்கும் போது, இவர்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டார்கள்.

(ii)சாதாரண உறுப்பினர்.

  • ஓவ்வொரு வருடமும் ரூபா. 100/= (நூறு) செலுத்துவதன் மூலம் தமது உறுப்புரிமையைப் புதுப்பிக்க முடியும்.
  • அடுத்த ஆண்டிற்கான அங்கத்துவப் பணத்தினை நடப்பாண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும்.
  • சந்தாப் பணத்தைச் செலுத்தாத உறுப்பினர் ஒருவர் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளவோ, வாக்களிக்கவோ, முன்மொழியவோ மற்றும் வழிமொழியவோ உரிமையற்றவராவார்.

9.உறுப்புரிமையிலிருந்து விலகுதல்.

சங்கத்திலிருந்து தனது உறுப்புரிமையை விலக்கிக் கொள்ள விரும்பும் உறுப்பினர் ஒருவர் தனது விருப்பத்தைப் பொதுச் செயலாளருக்கு எழுத்து மூலமான ஒருமாதகால முன்னறிவித்தல் கொடுத்து தெரிவிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தைப் பொதுச் செயலாளர், அடுத்துவரும் ஆட்சி மன்றக்கூட்டத்தில் சமர்ப்பிப்பார். ஆட்சி மன்றம் இவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதும், அதனைச் செயலாளர் சம்பந்தப்பட்டவருக்கு எழுத்து மூலம் தெரிவிப்பார்.

10.உறுப்புரிமையிலிருந்து விலக்குதல்.

1.சங்க உறுப்பினர் ஒருவர், சங்கத்தின் யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டால் அல்லது சங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அல்லது வேற்று மதத்தைத் தழுவிக் கொண்டால் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி, அவரது உறுப்புரிமை நீக்கப்படும்.

2. தலைவர், செயலாளர், பொருளாளர், தர்மகர்த்தா சபை உறுப்பினர்கள், காப்பாளர்கள் ஆகியோர் சங்கத்தின் யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டால் அல்லது சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அல்லது வேற்று மதத்தைத் தழுவிக் கொண்டால் அவரது பதவியினை ஆட்சிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தும். அடுத்துவரும் பொதுக்கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இறுதி முடிவு எடுக்கப்படும்.

11.வருடாந்தப் பொதுக் கூட்டம்.

  1. வருடாந்தப் பொதுக் கூட்டம் வருடா வருடம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதிக்கும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கும் இடையே நடாத்தப்படவேண்டும்.
  2. செயலாளரால் பொதுக்கூட்டத்துக்கான அறிவித்தல் பொதுக் கூட்டம் நடைபெற இருக்கும் திகதிக்கு 21 நாட்களுக்கு முன்னர், பொதுச்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  3. அங்கத்தவர்கள் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தமது பிரேரணைகளை/ஆலோசனைகளை பொதுக்கூட்ட அறிவித்தல் கிடைத்து 7 நாட்களுக்குள் எழுத்து மூலம் செயலாளருக்கு அனுப்புதல் வேண்டும்.
  4. பொதுக் கூட்டத்துக்கு நேரடியாக முதல் நடைபெறும் ஆட்சிமன்றக் கூட்டத்தில் இப்பிரேரணைகள் விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகள் மட்டும் பொதுச்சபைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  5. நிகழ்ச்சி நிரலும், பிரேரணைகளும், எண்பார்வையாளரின் வருடாந்தக் கணக்காய்வறிக்கையும் பொதுக்கூட்டம் நடை பெறுவதற்கு ஏழு (07) நாட்களுக்கு முன்னர் கிடைக்க கூடியதாக செயலாளரால் சகல பொதுச் சபை உறுப்பினர்களுக்கும்; அனுப்பி வைக்கப்படவேண்டும்.
  6. அடுத்த ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  7. பிரேரணை சமர்ப்பித்த உறுப்பினர் பொதுக் கூட்டத்திற்கு சமூகம் தரல் வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது பிரோரணை சபையில் பரிசீலிக்கப்படமாட்டாது.
  8. ஆட்சிமன்ற உறுப்பினர்கள், தர்மகர்த்தா சபை உறுப்பினர்கள் மற்றும் காப்பாளர்களில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யமுடியும்.

12. ஆட்சி மன்றம்.

சங்க செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தகைமையுடைய உறுப்பினர்- களில் இருந்து தலைவர் உட்பட 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

அ. தற்காலிகத் தலைவர்

பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படும் தற்காலிகத் தலைவரானவர் தர்மகர்த்தா சபையின் உறுப்பினர்களில் ஒருவராக இருக்க வேண்டும். அல்லாதவிடத்து காப்பாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும். இவர்கள் எவரும் சமூகமளிக்காத சந்தர்ப்பத்தில் கூட்டத்தில் சமுகமளித்திருக்கும் மூத்த உறுப்பினராக இருக்கும் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ளலாம். (மூத்த உறுப்பினர் என்பது உறுப்புரிமை அடிப்படையிலாகும்)

தற்காலிகத் தலைவரின் தலைமையில் புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார்.

ஆ. தெரிவு முறை

  1. பொதுக்கூட்டத்தில் தகைமையுள்ள பொதுச்சபை உறுப்பினர்- களால் ‘முன்மொழிதல்’ வழிமொழிதல்’ என்ற செயற்பாட்டின் மூலம் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். போட்டி நிலைமை ஏற்பட்டால் ஜனநாயக முறைப்படியான வாக்களிப்பின் மூலம் அதி கூடிய வாக்குப் பெறுபவர்கள் ஆட்சிமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.
  2.  பொதுச்சபை உறுப்பினர் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட ஆட்சி மன்ற உறுப்பினர்களை முன்மொழியவோ வழிமொழியவோ முடியாது.
  3. ஆகக் குறைந்தது மூன்று (3) வருடங்கள் பொதுச்சபை உறுப்பினராக இருக்கும் ஒருவரே ஆட்சிமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதி பெற்றவராகிறார்.
  4.  தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு இரண்டு (2) வருடங்கள் ஆட்சிமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தால் மட்டுமே தெரிவு செய்யப்பட வேண்டும்.
  5.  போட்டி நிலைமையைத் தவிர்த்துக்கொள்ளல் விரும்பத்தக்கது.

இ. புதிய தலைவரின் தலைமையில் பின்வருவோர் தெரிவு செய்யப்படுவார்கள்.

  1. பொதுச்செயலாளர் – 01
  2.  பொருளாளர் – 01
  3.  துணைத்தலைவர்கள் – 04
  4. துணைச் செயலாளர் – 01
  5. துணைப்பொருளாளர் – 01
  6. ஆட்சிமன்ற உறுப்பினர்கள் – 10

ஈ. ஏனையோர் தெரிவு

  1. கணக்காய்வாளர் – 01
  2. காப்பாளர்கள் – 02
  3. தர்மகர்த்தாசபையின்
    வெற்றிடத்துக்கான உறுப்பினர்கள் (மொத்த உறுப்பினர்கள் – 05)

13. ஆட்சி மன்றத்தின் பதவிக்காலம்.

ஆட்சிமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு (2) வருடங்களாகும்.

அ. பதவி விலகுதல்.

பொருத்தமான ஏதாவது காரணத்தைத் தலைவருக்கு எழுத்து மூலம் தெரிவித்து ஆட்சிமன்ற உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகிக்கொள்ளலாம்.

ஆ. தகைமையற்றோர்.

    1. சங்கத்தில் சம்பளம் பெற்று கடமையாற்றும் எந்த ஊழியரையும் ஆட்சிமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்ய முடியாது.
    2.  தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் எமது சங்கம் போன்ற வேறு அமைப்புக்களில் மேற்குறித்த எந்த பதவியும் வகிக்காதவர்- களாக இருக்க வேண்டும்.
    3. அரசியலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பதவிவகிப்போர் எமது சங்கத்தில் தலைவர், செயலாளார் மற்றும் பொருளாளராக பதவிகளில் செயல்படமுடியாது.
    4. அரசியல் தேர்தல் ஒன்றில் போட்டியிடும் ஆட்சிமன்ற உறுப்பினர் எவரும் தேர்தல் காலங்களில் சங்கத்தின் ஆட்சி மன்ற, பொதுச்சபைக் கூட்டங்களில் பங்கு கொள்ளமுடியாது.

14.தலைமை.

    1.  சங்கத்தின் தலைவர் எல்லாக் கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார்.
    2. தலைவர் சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் ஆட்சி மன்றத்தினால் தெரிவுசெய்யப்படும் துணைத்தலைவர்களில் ஒருவர் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவார்.
    3. தலைவர் அல்லது துணைத்தலைவர்கள் சமூகமளிக்காத சந்தர்ப்;பத்தில் ஆட்சிமன்ற மூத்த உறுப்பினர் ஒருவர் பெரும்பான்மையோரின் அனுமதியோடு கூட்டத்துக்குத் தலைமை தாங்கலாம். (மூத்த உறுப்பினர் என்பது உறுப்புரிமையை அடிப்படையாக கொண்டது)

15. தலைவர்.

 அ. கடமைகள்.

    1. சங்கத்தின் யாப்பு விதிகளுக்கு அமைய சங்கத்தின் அலுவல்களைச் செயல்படுத்துபவராக இருப்பார்.
    2. சங்கத்தின் நலன் சார்ந்த விடயங்களுக்காக அரச, சமூக, சமய, தனியார் நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணிக் சொள்வார். அவற்றினது கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.
    3.  சங்கத்துக்கான வருமான வழிகளைப் பன்முகப்படுத்துவதிலும், சங்கத்தின் செலவுவழிகளைக் கட்டுப்படுத்துவதிலும் ஆலோசகராக இருப்பார்.
    4.  வேறு இந்து சமய நிறுவனங்களுக்கு உதவுவதிலும், அவற்றிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலும் உறுப்பினர்களை வழிநடத்துவார்.
    5. வருடாந்தப் பொதுக்கூட்டம், விசேட பொதுக்கூட்டம், மாதாந்த ஆட்சிமன்றக் கூட்டம் மற்றும் விசேட ஆட்சிமன்றக் கூட்டம் என்பவற்றைக் கூட்டும்படி செயலாளரைக் கேட்டுக்கொள்வார்.
    6. சங்கத்தின் ஊழியர்களுக்கு கடமைப் பட்டியல் வழங்குவார்.
    7. செயலாளர் மற்றும் பொருளாளர் தத்தமது கோவைகளையும், பதிவேடுகளையும், வேறு தகவல்களையும் ஒழுங்கு முறையில் பேணிக் கொள்கிறார்களா என்பதை மேற்பார்வை செய்வார்.

ஆ. பதவி விலகல்.

    1. தலைவர் பதவி விலக விரும்பினால் ஒரு மாத முன்னறிவித்தல் கொடுத்து, ஆட்சிமன்றக் கூட்டம் ஒன்றில் தனது விருப்பத்தை எழுத்து மூலம் தெரிவித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
    2. தலைவர் பதவி விலகுமிடத்து துணைத்தலைவர்களில் ஒருவர் ஆட்சிமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின்
      அனுமதியுடன் தலைமைப் பொறுப்பை ஏற்பார். மூன்று (3) மாதத்தினுள் பொதுக்கூட்டம் வராது போனால் விசேட பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி புதிய தலைவர் ஒருவர் அக் கூட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவார்.

16. பொதுச் செயலாளர்.

அ. கடமைகள்

    1.  சங்கத்தின் சகல நிர்வாக நடவடிக்கைகளையும் கவனிப்பார்.
    2.  சங்கத்தின் எழுத்துப்பிரதிகள், கடிதக் கோவைகள், குறிப்புப் புத்தகங்கள, பதிவேடுகள், இறப்பர் முத்திரைகள் மற்றும் ஆவணங்களைப் பாரமரித்தலும், பாதுகாத்தலும்.
    3. சங்கத்துக்கான சகல கடிதத் தொடர்புகளையும் செய்தல்.
    4. வருடாந்தப் பொதுக் கூட்டம், விசேட பொதுக்கூட்டம், மாதாந்த ஆட்சிமன்றக் கூட்டம் மற்;றும் விசேட ஆட்சி மன்றக் கூட்டம் என்பனவற்றைத் தலைவரின் அனுமதியுடன் கூட்டுதல்.
    5.  சகல கூட்டங்களுக்கும் அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் தயாரித்தல்.
    6. சகல உறுப்பினர்களுக்கும் உரிய முன்னறிவித்தலோடு அழைப்புக் கடிதங்கள் அனுப்புதல்.
    7. சகல கூட்டங்களிலும் குறிப்பு எடுத்துக் கொள்ளுதல். அடுத்து வரும் கூட்டங்களில் அறிக்கைகளைச் சமர்ப்பித்து சபையின் அனுமதியை; பெற்றுக் கொள்ளுதல்.
    8. ஆட்சி மன்றத்தினர் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்.
    9. அங்கத்தவர் இடாப்பை சீர் செய்தலும், நீண்ட காலம் தொடர்பற்ற உறுப்பினர்களை நீக்கிக் கொள்ள ஆட்சிமன்றத்துக்குச் சிபார்சு செய்தலும்.
    10. பொதுக் கூட்டங்களுக்கு முன்னர் சங்கத்தின் வாக்களிக்கும் தகுதி பெற்ற உறுப்ப்pனர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
    11. கேள்வி கோரும் நடவடிக்கைகளைச் செய்தலும், பெற்றுக் கொண்ட கேள்விகளை உபகுழுவிடம்,கையளித்தலும்.
    12. ‘கேள்விகள் திறத்தல்’ நடவடிக்கைகளில் தலைவருக்கும் பொருளாளருக்கும் உதவுதல்.
    13.  பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதை/வேலைகள்செய்யப்பட்டதை / சேவைகள் செய்யப்பட்டதை உறுதிப்படுத்துதல்.
    14.  புதிய செயலாளரிடம் பதவி;ப் பொறுப்பைக் கையளிக்கும் போது தமது பொறுப்பிலுள்ள சகல ஆவணங்களையும், பொருட்களையும் பட்டியலிட்டு புதியவரிடம் ஒப்படைத்து கையெழுத்து வாங்கி, பட்டியலைத் தலைவரிடம் கையளித்தல்.

ஆ. பதவி விலகல்.
செயலாளர் பதவி விலகவிரும்பினால் ஒரு மாத முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். துணைச் செயலாளர்  செயலாளரின் கடமைகள் முழுவதையும் தற்காலிகமாக பொறுப்பேற்பார். அவர் அடுத்த பொதுக்கூட்டம் வரை பதவி வகிப்பார்.

17. பொருளாளர்.

அ. கடமைகள்

1. சங்கத்தின் பிரதம நிதி அலுவலராகச் செயல்படுவார்.

2. நிதி சேகரித்தல், பாதுகாத்தல்,ஆட்சிமன்றத்தின் அனுமதியின் பேரில் செலவு செய்தல்.

3. காசுப் பதிவேடு வைத்து வரவு செலவு விபரங்களைச் சரிவரப் பேணிக் கொள்ளுதல்.

4. நிதி வரவுகளை இலங்கை வங்கியில் அல்லது ஆட்சிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் வைப்புச்செய்தல். 5. பற்றுச் சீட்டுப் புத்தகங்கள், செலவுறுதிச் சிட்டைகள், காசோலைப் புத்தகங்கள் என்பனவற்றை பேணிக்கொள்ளலும் பாதுகாத்தலும்.

6. ஒவ்வொரு ஆட்சி மன்றக் கூட்டத்திலும் மாதாந்த வரவு செலவுக் கணக்கு விபரங்களைச் சரியாகச் சமர்ப்பித்தல்.

7. 10,000/= (பத்தாயிரம்) ரூபாவுக்கு மேற்பட்ட கொடுப்பனவுகள் யாவற்றையும் காசோலை மூலம் வழங்குதல்.

8. கொள்வனவுகள், வேலைகள், சேவைகள் பணப் பெறுமதிக்கு சமமானதா? என்பதைக் கணித்துக் கொள்ளல்.

9. நிதி வரவு மூலங்களை விஸ்தரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குதல். செலவீனங்களை கட்டுப்படுத்துதல்.

10. சங்கத்தின் அவசியமான உடனடியான செலவுகளைச் செய்வதற்காக ரூபா 10,000/= (பத்தாயிரம்) சிறு கையிருப்பில்வைத்திருத்தல்;. (Petty Cash) அதன் செலவுத் தொகையை வங்கியிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளல். (Reimbursement)

11. ஆறு (6) மாதத்துக்கு ஒரு முறை கணக்காய்வாளரின் எழுத்து மூலமான அவதானிப்புக்கள், ஆலோசனைகளைப் பெற்று ஆட்சிமன்றக் கூட்டத்தில் சமர்ப்பித்தல்.

12. ஒவ்வொரு வருட இறுதியிலும் கணக்கறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். அது அடுத்த பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

13. புதிய பொருளாளரிடம் பதவிப் பொறுப்பைக் கையளிக்கும் போது தமது பொறுப்பிலுள்ள சகல ஆவணங்களையும், பொருட்களையும் பட்டியலிட்டு புதியவரிடம் ஒப்படைத்து கையெழுத்து வாங்கி, பட்டியலைத் தலைவரிடம் கையளிக்க வேண்டும்.

ஆ. பொருட்கள் பதிவேடுகள்.

1. சங்கத்தின் பொருட்கள் யாவும் தனித்தனியான பதிவேட்டில் பதிவு செய்தல்.

2. ஆண்டு இறுதியில் பொருட்கள் பதிவேடு சமன் செய்யப்பட்டு இறுதி இருப்புக்கு அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு வருடாந்தப் பொதுச்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் (Verification Report).

இ. கேள்வி கோரல் நடவடிக்கை (Tender Procedure)

1. உப குழுக்கள் மூலம் கேள்வி கோரல் செயல்படுத்தப்படல் வேண்டும்.

2. ஓரு லட்சம் ரூபாவும் (100,000/=) அதற்கு மேலும் மொத்தப் பெறுமதியுள்ள எந்தப் பொருளையும் அல்லது பொருட்களையும் வாங்கும் போது பகிரங்கமாகக் கேள்வி கோரும் நடவடிக்கையைப் பொருளாளர் பின்பற்ற வேண்டும்.

3. கேள்வி கோரும் போது அதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்.

4. சில சந்தர்ப்பங்களில் விலைமனு கோர முடியாத பொருட்களை வாங்க வேண்டுமாயின் ஆட்சிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

5. கட்டடங்கள் திருத்துதல், கட்டுதல் என்பனவற்றுக்கு கேள்வி கோரும் போது அதற்கான செலவு ரூபா ஐந்து இலட்சத்துக்கு
(500,000/=) மேற்படுமாயின் ஒரு செலவு மதிப்பீடு (BOQ) தயாரித்து வைத்திருக்க வேண்டும்.

ஈ. பதவி விலகல்.

1. பொருளாளர் பதவி விலக விரும்பினால் ஒரு மாத முன்னறிவித்தலில் ஆட்சிமன்ற கூட்டம் ஒன்றில் தனது விருப்பத்தை எழுத்த மூலம் தெரிவிக்க வேண்டும்.

2. பொருளாளர் பதவி விலகுமிடத்து 3 மாதத்திற்குள் பொதுக்கூட்டம் வராது போனால் விசேட பொதுக் கூட்டம் ஒன்றை கூட்டி புதிய பொருளாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார். அது வரை தற்காலிகமாக துணைப்பொருளாளர் ஆட்சிமன்ற தீர்மானத்திற்கு அமைய பொருளாளராக செயல்படுவார்.

18. துணைத்தலைவர்கள் – 04

1. தணைத் தலைவர்கள் எப்போதும் தலைவருக்கு உதவி செய்பவர்களாக இருப்பார்கள்.

2. தலைவர் சமுகமளிக்க முடியாத சந்தர்ப்பங்களில் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்கள.

3. தலைவருக்குப் பதிலாக கடமையாற்றும் துணைத்தலைவர் ஒருவர் தலைவருக்குரிய சாதாரண கடமைகளைச் செய்யலாம்.

4. முக்கியமெனக் கருதும் விடயங்களில் தலைவரின் முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

5. ஆட்சிமன்றத்தினால் அமைக்கப்படும் உப குழுக்களுக்குத் தலைவராக இருந்து செயற்படுவார்கள்.

19. துணைச் செயலாளர்.

1. எப்போதும் பொதுச் செயலாளருக்குத் துணையாக இருப்பார்.

2. பொதுச் செயலாளர் சமுகமளிக்காத சந்தர்ப்பங்களில் அவருக்குரிய சாதாரண கடமைகளைச் செய்வார்.

 

20. துணைப் பொருளாளர்.

1. பொருளாளருக்கு எப்போதும் உதவியாக இருப்பார்.

2. பொருளாளர் பதவி விலகும் சந்தர்ப்பங்களில் ஆட்சிமன்றத் தீர்மானத்திற்கு அமைய பொருளாளரின் கடமைகளை பொறுப்பேற்பார்.

21. கணக்காய்வாளர்.

1. சங்கத்தின் வரவு செலவுக் கணக்குகளை அவ்வப்போது பரிசீலணை செய்வதற்காக கௌரவ கணக்காய்வாளர் ஒருவர் பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவார்.

2. கணக்காய்வாளர் 6 மாதங்களுக்கு ஒருமுறை பொருளாளரின் பதிவேடுகளையும், ஆவணங்களையும் பார்வையிட்டு தனது அவதானிப்புகளையும், ஆலோசனைகளையும் பொருளாளர் ஊடாக ஆட்சி மன்றத்திற்கு தெரிவிக்கவேண்டும்.

3. கணக்காய்வாளர் பொருளாளரால் தயாரிக்கப்படும் ஆண்டு இறுதிக் கணக்கறிக்கையைப் பரிசீலணை செய்து தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பார். பொருளாளர் அடுத்து நடைபெறும் ஆட்சிமன்றக் கூட்டத்தில் அதனைச் சமர்ப்பித்துச் சபைக்கு விளக்கம் அளிப்பார்.

4. பொதுச்சபைக் கூட்டத்தில் கணக்கறிக்கையை பொருளாளர் வாசிக்கும் போது தேவையேற்படின் அவ்வறிக்கை பற்றி கணக்காய்வாளர் பொதுச் சபையினர்க்கு விளக்கமளிப்பார். கணக்கறிக்கை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

22. காப்பாளர்கள்.

சங்கத்துக்கான காப்பாளர்கள் இருவர் பொதுக்கூட்டத்தில் பொதுச்சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுவார்கள். சங்கச் செயற்பாடுகளில் பிணக்குகள் ஏற்படும்போது இவர்கள் தலையிட்டுத் தீர்த்து வைக்க முயலுவார்கள். தலைவரின் அழைப்பின்பெயரில் ஆட்சிமன்ற கூட்டத்தில் பங்குபற்றலாம்.

அ. சங்கத்தின் முன்னாள் தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்களில் குறைந்த பட்சம் ஒருவராவது சங்கத்துக்கான காப்பாளர்களாக தெரிவ செய்யப்படல் வேண்டும். இவர்கள் இல்லாதவிடத்து 10 வருடங்களை நிறைவு செய்த உறுப்பினர்களில் இருந்து தெரிவுசெய்யலாம்.

23. தர்மகர்த்தா சபை.

சங்கத்தின் அசையும் அசையாச் சொத்துக்களை பாதுகாக்கவும், ஆட்சி செய்யவும் ஐந்து (5) உறுப்பினர்கள் அடங்கிய தர்மகர்த்;தா சபையொன்று நிறுவப்பட்டிருக்கும். இச்சபைக்கான உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் அல்லது விசேட பொதுக் கூட்டத்தில் வழக்கமான
தெரிவு முறைப்படி தெரிவு செய்யப்படுவார்கள். தெரிவுசெய்யப்படும் தர்மகர்த்தாக்கள் அவர்கள் இறக்கும்வரை அல்லது கடமையாற்றச் சக்தியற்றுப் போகும்வரை அல்லது தாமாகவே பதவி விலகும்வரை கடமையாற்றுவார்கள். இவர்கள் ஆட்சி மன்றத்தில் அங்கம் வகிக்கமுடியாது. ஆனால் அவசியமும் அவசரமும் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தலைவரின் அழைப்பின் பேரில் ஆட்சிமன்றக் கூட்டங்களில் பங்குபற்றி ஆலோசனைகள் வழங்கலாம்.

அ. தர்மகர்த்தாக்களாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் இச்சங்கத்- தில் தொடர்ச்சியாகக் குறைந்தது 15 (பதினைந்து) வருடங்கள் தகுதி பெற்ற அங்கத்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.

24. சத்தியப்பிரமாணம்.

வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆட்சிமன்ற உறுப்பினர்கள், காப்பாளர்கள், தர்மகர்த்தாக்கள் எல்லோரும் ”சங்கத்தின் யாப்பு விதிகளுக்கமைய தாம் செயல்படுவ-தாகவும், இந்து சமயத்தின் விழுமியங்களையும்,கோட்பாடுகளையும் சமூக மக்களிடையே பரப்புவதற்கும், சங்கத்தின் பணிக்கூற்றுக்கு ஏற்றபடி செயற்பட்டு சங்கத்தின் தூரநோக்கை நிறைவேற்றிக் கொள்வதற்கும், பூரணமான ஒத்துழைப்பு வழங்குவதற்கு சம்மதிப்பதாகவும்” சங்கத்தின் நடராசர் மண்டபத்தில் இருக்கும் நடராசர் சன்னதியில் தர்மகர்த்தா ஒருவர் முன்னிலையில்; அல்லது முன்னைநாள் காப்பாளர் ஒருவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும்.

25. ஆட்சி மன்றம்.

அ. ஆட்சிமன்றக் கூட்டங்கள்
ஆட்சிமன்றக் கூட்டங்கள் மாதம் ஒரு முறையாவது கூட்டப்படல் வேண்டும். அறிவித்தலும் நிகழ்ச்சிநிரலும் 5 நாட்களுக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆட்சி மன்ற உறுப்பினர்களுக்குச் செயலாளரால் அனுப்பப்பட வேண்டும். அவசர காரணங்களுக்- காக மட்டும் தலைவரின் அனுமதியுடன் 3 நாள் முன் அறிவித்தலுடன் கூட்டங்கள் கூட்டப்படலாம்.

1. தேவார பாராயணத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு தேவார பாராயணத்துடன் கூட்டம் முடிக்கப்பட வேண்டும்.

2. விசேட நோக்கத்துக்காக கூட்டப்பட்ட கூட்டமாக இருந்தால், அந்த விடயம் மட்டுமே உரையாடல் பொருளாக இருக்கும்.

ஆ. ஆட்சி மன்றத்தின் பண்புகள்.

1. இந்துப் பண்பாட்டைப் பேணிக்கொள்ள வேண்டும்.

2. சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்குவதோடு, அதற்காக அயராது உழைக்கவும் வேண்டும்.

3. சமூகத்திலே சங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்டாதவாறு நடந்து கொள்ள வேண்டும்.

4. ஆட்சிமன்ற உறுப்பினர்கள் தமக்குள்ளும், பொதுச்சபை உறுப்பினர்களோடும் சுமுகமான உரையாடல்களைச் செய்து கொள்ளல் வேண்டும்.

5. சங்கத்தின் ஊழியர்களுடனும் சுமுகமான உறவைப் பேணிக் கொள்ள வேண்டும்.

 

இ. ஆட்சி மன்ற உறுப்பினர்களின் கடமைகள்.

1. சங்கத்தின் முன்னேற்றத்துக்காகவும். சமூகநலனுக்காகவும், இந்து சமய விழுமியங்களைப் பேணிக் கொள்வதற்காகவும்  சிறந்த திட்டங்களை ஆட்சிமன்றக் கூட்டங்களில் சமர்ப்பித்து, அத்திட்டங்களைச் செயல்முறை படுத்துவதற்கு ஆர்வத்துடன் செயல்படுதல்.

2. சங்கத்துக்குரிய கடமைகளைச் செய்து முடிப்பதற்கு ஆட்சிமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உப குழுக்களை நியமனம் செய்து தலைவருக்கு ஆதரவு வழங்குதல். 3. சங்கத்தின் கட்டடங்கள், தளபாடங்கள் மற்றும் ஆதனங்களைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் அக்கறை காட்டுதல்.

4. சங்கத்தில் நடைபெறும் பூசைகள், விழாக்கள், நிகழ்சிகள் என்பவற்றில் பங்குபற்றுவதுடன், அவற்றினை ஒழுங்குபடுத்தவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

5. சங்க நிகழ்வுகளில் பங்குபற்றும் போது கலாச்சார உடையுடன் பங்குபற்ற வேண்டும்.

 

ஈ. ஆட்சி மன்றத்தின் கடமைகள்.

1. சங்கத்தின் செயற்பாடுகளுக்கு தேவையான சம்பளம் பெறும் ஊழியர்களை நியமனம் செய்யலாம்.

2. அவசரமான சந்தர்ப்பங்களில் தலைவர் ஊழியர்களை நியமிதித்துவிட்டு ஆட்சிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

3. ஊழியர்களுக்கான கடமைப் பட்டியல் வழங்கப்பட வேண்டும். அதிலே அவர்களுக்கான கடமைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதிலே தலைவர், கையெழுத்திட வேண்டும்.

4. தேவையேற்பட்டால் ஊழியர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும், அவர்களைப் பதவி நீக்கிக் கொள்ளவும் ஆட்சிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. 5. நியமிக்கப்படும் ஊழியர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

6. ஊழியர்களாகச் சேர்த்த பின்னர் வேற்று மதத்தைத் தழுவிக் கொண்டால் அவர்கள் சேவையிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.

உ. ஆட்சி மன்றக் கூட்டங்களுக்கு சமுகமளிக்காதோர்.

ஆட்சிமன்ற உறுப்பினர் எவராவது எழுத்து மூலமான முன்னறிவித்தல் எதுவுமின்றி தொடர்ந்து மூன்று (3) ஆட்சி மன்ற கூட்டங்களுக்கு சமுகமளிக்காவிடின் அவர் தாமாகவே பதவி விலகிக் கொண்டவராகக் கணிக்கப்டுவார்.

26. நூல் நிலைய காப்பாளரும் அவரது கடமைகளும்.

நூல் நிலையம் ஒன்றை இயக்குவதற்கு நூல் நிலைய காப்பாளர் ஓருவரை ஆட்சிமன்ற உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்து நியமிக்க வேண்டும்.

1. பொருத்தமான முறையில் புத்தகப் பெயர் விபரப்பட்டியல் ஒன்று தயாரிக்கப் படவேண்டும்

2. ஆட்சி மன்றத்தினரின் அனுமதியுடன் புதிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

3. ஆட்சி மன்றத்தினரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நேரங்களில் நூல் நிலையத்தைத் திறந்த மூடிக்கொள்ளலாம்.

4. நூல் நிலையங்களில் பின்பற்றும் நடைமுறையைப் பின்பற்றி புத்தகங்களை சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் இரவல் கொடுத்த வாங்கிக் கொள்ளலாம்.

27. உடற்பயிற்சி பயிற்றுனரும் அவரது கடமைகளும்.

உடற்பயிற்சி பயிற்றுனர் ஒருவர் ஆட்சிமன்ற உறுப்பினர்- களிலிருந்து தெரிவு செய்து நியமிக்கப்படலாம்.
1. சங்கத்தின் சகல உறுப்பினர்களதும் தேக நலத்துக்காக பல விளையாட்டுக்களைநடாத்துதல்.

2. விளையாட்டுப் பகுதியின் அபிவிருத்திக்காக திட்டங்களைத் தயாரித்தல்.

3. அத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆட்சி மன்றத்தினரின் அனுமதியைப் பெறுதல்.

4. விளையாட்டுப் பொருட்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இருத்தல்.

28. விசேட பொதுக் கூட்டம்.

அ. சங்கத்துக்கு முக்கியமான ஒரு அவசர தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொதுச்சபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆட்சி மன்றம் கருதினால், பொதுச் செயலாளர் ஒரு விசேட பொதுக் கூட்டத்தைக் கூட்டலாம். இக்கூட்டத்துக்கான காரணத்தைத் தெரிவித்து பொதுச் சபை உறுப்பினர்களுக்கு 7 நாட்களுக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அறிவித்தல் வழங்கப்பட வேண்டும்.

ஆ. சங்கத்தினரின் தகுதி பெற்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு (1/3) பங்கினர் கையெழுத்திட்டு செயலாளருக்கு விண்ணப்பித்-தாலும், விசேட பொதுக் கூட்டம் ஒன்று கூட்டப்படலாம். விசேட பொதுக் கூட்டம் ஒன்று கூட்டப்படுவதற்கான தக்க காரணம் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டும். செயலாளர் 7 நாட்களுக்குள் ஆட்சிமன்றத்தின் மாதாந்தக் கூட்டத்தில் விண்ணப்பத்தைச் சமர்பித்து அனுமதி பெற்று 14 நாட்களுக்குள் விசேட பொதுக்கூட்டத்தைக் கூட்டலாம். இக் கூட்டத்தில் கூட்ட அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட விடயம் மட்டுமே விவாதிக்கப்படல் வேண்டும்.

29. நிறைவெண்.

வருடாந்தப் பொதுக்கூட்டத்திலும், விசேட பொதுக்கூட்டத்திலும், சங்க உறுப்பினர்களில் தகுதி பெற்ற உறுப்பினர்களில் 1/3 பங்கினரோ அல்லது 30 (முப்பது) பேரோ, இதில் எது குறைவான எண்ணிக்கை உடையதோ அது நிறைவெண்ணாகக் கருதப்படும். ஆட்சிமன்றக் கூட்டங்களில் பத்து (10) உறுப்பினர்கள் சமுகமளிப்பது நிறை வெண்ணாகக் கொள்ளப்படும்.

வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கும், விசேட பொதுக்கூட்டத்திற்கும் உறங்கு நிலை உறுப்பினர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு நிறைவெண் கணக்கிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

30. வாக்குரிமை.

1. சங்கத்தில் அங்கத்தவராகச் சேர்ந்து ஒரு (1) வருடத்தைப் பூர்த்தி செய்த ஒருவருக்கே வாக்களிக்கும் உரிமை உண்டு.

2. சங்கத்தின் தகுதி பெற்ற சகல அங்கத்தவர்களுக்கும் வருடாந்தப் பொதுக் கூட்டத்திலும், விசேட பொதுக்கூட்டத்திலும், ஆட்சிமன்ற உறுப்பினரகள் தெரிவின் போதும் தமக்கு விரும்பியவர்களுக்கும், தீர்மானங்களை நிறைவேற்றும் போது தீர்மானத்தின் மீதும் வாக்களிக்கும் உரிமை உண்டு.

 

31.நிதி.

அ. நிதி பின்வரும் வழிகளில் திரட்டப்படலாம்.

1. உறுப்பினர் செலுத்தும் சந்தாப்பணம்.

2. சங்கத்தினால் செய்யப்படும் சேவைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்.

3. சங்க உறுப்பினர்கள், உறுப்பினர் அல்லாதோர் மற்றும் அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களில் கிடைக்கும் நன்கொடைககள்

4. சங்கத்திற்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகளை வாடகைக்கு வழங்குவதன் மூலம்.

5. பிரயாணிகள் தங்கி செல்வதற்கான தங்குமிட வசதிகள் செய்து கொடுப்பதன் மூலம்.

ஆ. நிதி முகாமை.

1. சங்கத்தின் நிதி, வரவுகள் யாவும் அரச வங்கிகளில் அல்லது ஆட்சிமன்றத்தின் தீர்மானப்படி மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்யப்படவேண்டும். இந்த நிதிகளைப் பொருளாளருடன் தலைவர், செயலாளர் சேர்ந்து முகாமை செய்து கொள்வார்கள்.

2. சங்கத்துக்கான நிலையான வைப்புக் கணக்கு (Fixed Deposit) அரச வங்கியில் பேணப்பட வேண்டும்.

3. கொடுப்பனவுகள் யாவும் காசோலை மூலம் செய்யப்படவேண்டும். சிறுகையிருப்பு நிதியில் (Petty Cash) இருந்து செய்யப்படும் செலவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

4. காசோலைகளில் முதலாவது கையெழுத்துக்காரராகப் (First Signatory) பொருளாளர் கையெழுத்திடுவார். இரண்டாவது கையெழுத்துக்காரராகத் (Second Signatory) தலைவர் அல்லது செயலாளர் கையெழுத்திடுவார்.

5. செலவீனங்கள் ஆட்சிமன்றத் தீர்மானப்படி ரூபா ஐந்து இலட்சத்திற்கு (5) உட்பட்டதாக இருக்க வேண்டும். மேற்பட்ட செலவீனங்களுக்கு பொதுச் சபையின் அனுமதி பெறல் வேண்டும்.

32. கிளைச் சங்கங்கள்.

வவுனியா நகர சபை எல்லைக்கு அப்பால் இச்சங்கத்தின் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் நோக்கமாக கிளைச் சங்கங்கள் அமைக்கப்படலாம். கிளைச்சங்கங்கள் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் யாப்பு விதிகளைக் கட்டாயமாக அனுசரித்துச் செயல்படவேண்டும்.

33. யாப்பு விதிகள்.

1. சங்கத்தின் யாப்பு விதிகளில் அங்கத்தினர் யாருக்காவது கருத்து வேற்றுமை ஏற்பட்டால், ஆட்சிமன்றத்தின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும். ஆயினும் இம்முடிவு அடுத்து வரும் பொதுக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

2. சங்கத்தின் யாப்பு விதிகளை மாற்ற, திருத்தியமைக்க, அகற்ற அல்லது வேறு விதிகளைச் சேர்த்துக் கொள்ள அங்கத்தவர்கள் விரும்பினால், முதலில் அதனை ஆட்சிமன்றத்துக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். பின்னர் ஆட்சிமன்றம் அதனை ஆராய்ந்து முடிவெடுத்துக் கொள்ளும். ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அல்லது விசேட பொதுக் கூட்டத்தில் மாற்றங்கள், திருத்தங்கள், அகற்றல்கள், சேர்ப்புக்கள் விவாதிக்கப்பட்டு, அந்தக் கூட்டத்தில் சமுகமளித்த தகுதி பெற்ற அங்கத்தவர்- களில், 2/3 (மூன்றில் இரண்டு) பங்கினரின் ஆதரவோடு ‘முன்மொழிதல் ” ‘வழிமொழிதல்” முறையின்படி அவை அங்கீகரிக்கப்பட்டு யாப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

3. யாப்பு திருத்தம், மாற்றம் முதலானவை நடைபெறும் கூட்டத்தில் தகுதி பெற்ற அங்கத்தவர்களில் 2/3 (மூன்றில் இரண்டு) பேர் கலந்து கொண்டிருத்தல் வேண்டும். 4. யாப்புத் திருத்த பொதுக்கூட்டத்திற்கான நிறைவெண் தகுதிபெற்ற உறுப்பினர்களில் 2/3 பங்கினராக இருத்தல் வேண்டும்.

34. உடை.

கூட்டங்கள், விழாக்களுக்கு உறுப்பினர்கள் கலாச்சார உடை அணிந்த வருகை தர வேண்டும்.

 

35. தொடர்பாடல்.

1. மின் அஞ்சல், இணையதளம். முகப்புத்தகம். தொலைபேசி (E-mail,Website,Facebook,Telephone) என்னவற்றின் ஊடாக சங்கம் தனது அங்கத்தவர்களோடும், பொது மக்களோடும் தொடர்பாடல்களைச் செய்து கொள்ளலாம்.

2. இச்சங்கத்தின் கூட்டங்கள் யாவும் தமிழ் மொழியில் மட்டுமே நடாத்தப்படும். வேறு மொழிகளில் விரிவுரைகள் சொற்பொழிவுகள் நடை பெறுமாயின், அவை தமிழில் மொழி பெயர்க்கப்படும். சங்கத்தின் பதிவுகள், பதிவேடுகள், குறிப்புக்கள், கடிதத் தொடர்டபுகள், ஆவணங்கள்,அழைப்புக் கடிதங்கள், விளம்பரங்கள் யாவும் தமிழ் மொழியிலேயே செய்யப்படும்.

36. அசையா சொத்து.

1. சங்க மண்டபங்களில் இந்து சமய கல்வி, கலாசார நிகழ்வுகள் தமிழியல் மற்றும் இந்து சமய விழுமியங்கள் சார்பான கொண்டாட்டங்கள் நிகழ்வுகள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படும்.

2. வேற்று மதம் சம்பந்தமான கூட்டங்கள் நிகழ்வுகள் நடாத்துவதற்கு அனுமதியில்லை.

3. சங்க கட்டிடங்கள் நீண்ட நாட்களுக்கு வாடகைக்கு விடப்படும் பொழுது வாடகைக்காரர்களுடனான ஒரு ஒப்பந்தம் சட்டத்தரணியினுடாக செய்யப்படவேண்டும்.

37. அசையும் சொத்து.

சங்கமானது வருமானம் ஈட்டும் நோக்கமாகவோ அல்லது தமது தேவைக்காகவோ அசையும் சொத்துகளை பயன்படுத்தலாம். இச் சொத்துக்கள் ‘தலைவர் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்.

சுபம்

நிறைவு

இந்த யாப்பு விதிகள் 24-12-1971 ஆம் திகதி நடந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் 15.05.1994, 25.02.1996, மற்றும் 29.11.2015 ஆகிய திகதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் திருத்தியமைக்கப்பட்டது.

தற்போது மேற்குறித்த யாப்பானது பொதுச் சபை அங்கத்தவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப 22.8.2018 இல் நடந்த “யாப்புத் திருத்தத்துக்கான விசேட ஆட்சி மன்றக் கூட்டத்தில்” சமர்ப்பிக்கப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டு, மீண்டும் 09.10.2018 ஆம் திகதி நடைபெற்ற ஆட்சி மன்றக்கூட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் 07.11.2018 ஆம்திகதி நடைபெற்ற ஆட்சி மன்றக்கூட்டத்தில் இறுதியான திருத்தங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுத் திருத்தங்கள் செய்யப்ட்டது.
மேலும் 12.12.2018 ம் திகதி காப்பாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதியாக 06.04.2019ம் திகதிய பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் பொதுச் சபையோரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

திரு.நா.தர்மராஜா (அகளங்கன்) தலைவர்
திரு.தே.அமலன். செயலாளர்
திரு.த.யசோதரன். பொருளாளர்

Back To Top